நந்திக்கடலோரத்தில் எங்கேனும் ஓர் இடத்திலேனும்
ஒரு விளையாட்டுக்கேனும்
மணல் குவித்து ஓர் கல்லறை கட்டு
அது நிஜமாகும் அங்கே பிணமுறங்கும்
தவறி மலர்கள் வீழ்ந்தாலும்
விட்டுவிடு கவலை கொள்ளாதே
அது யாருடையதோ புதைகுழியின்மேல்தான் வீழ்ந்திருக்கும்.
கவனமாய்
நட மகனே காலின் கீழ்காவியங்கள் உறங்குகின்றன.
பிணத்தைச்சுற்றியல்ல
ஊர்களையே வளைத்திருந்து ஒப்பாரி வைக்கும்
பெண்டிர்களை எழுதிவைப்போம்.
குறிஞ்சிக்கும் முல்லைக்கும் நெய்தலுக்கும் மருதத்துக்கும்
மொத்தமாய் இரங்கலையே எழுதிவைப்போம்.
நந்திக்கடல் ஓர் ஒழுக்கம்
அதை ஓட்டைவிழாத கரங்களால்
வாரி எடுத்து பத்திரப்படுத்தி கொடுங்கள்.
No comments:
Post a Comment