.

Saturday, 8 November 2014

வீடு ----பொன்-காந்தன்





வீடு கட்டித்தந்தென்ன
ஜன்னல்களையும்
கதவுகளையும்
இறுக பூட்டித்தானே வாழ்கின்றோம்.

கதவுகளையும்
ஜன்னல்களையும் பூட்டியென்ன
ஓநாயின் வீட்டில்
வழி எதுவென்று
அதற்குத்தானே தெரியும்.

யாருடைய
வீடாக இருந்தாலென்ன
எப்போதும் அது தட்டப்பட்டால்
அதுவேறு யாருடையதோ வீடுதான்.

வீடுகள் கட்டும்போது
வீடுகள் உடைக்கப்படுகையில்
எவை உடைந்தன
எப்படி வீழ்ந்தன
எல்லாமே தேவையாகின்றது
நம்முடையவீட்டை
நாம் கட்டுவதற்கு.....

வரலாறு -----பொன்-காந்தன்








சிலர் கடவுளும் தாமும்
ஒரே காலத்தவர்கள் என்று மகிழ்ந்தார்கள்.
வேறு சிலர்
உலகத்தின் முதல் வார்த்தை
தம்முடையதென்று பெருமிதப்படுகின்றார்கள்.
இன்னும் கிறிஸ்த்துவுக்கு முன் பின் என்று
உலக மாந்தர்கள்
தமக்கு வரலாற்றுக்குறிப்பு வைத்துக்கொள்கிறார்கள்.
நம்மில் சிலருக்கோ
நேற்று நடந்ததே ஞாபகத்தில் இல்லை
இப்படி யாரும்
உலகத்தில் யாரும் தடுமாறியதில்லைப்போல்..

வாழ்வின் கணம் -----பொன்-காந்தன்









எங்கோ போகுமவன்
ஏதோ நினைப்பில்
சாலைச்செடியின் நுனி கிள்ளி
வழி எங்கும் எறிந்தும்
வாயில் சிறுதுளிர் மென்றும்
எங்கோ போய்த்தொலைந்தான்.
இலையுமறியா
அவனுமறியாக் கணங்கள்
வாழ்வில் இப்படி எத்தனை எத்தனை..
Ş