.

Monday, 26 May 2014

மற்றச்சிறகு





பொன்-காந்தன்







பருவவயதில்
காதல் தோல்விகளின்போதுஅடிக்கடி
எல்லாமே முடிந்துபோனது
இனி எதுவுமில்லை
ஒற்றைச்சிறகு உடைந்துவிட்டதாய்
இடிந்துபோனேன்.
புரட்சிக்காலத்தில்
ஊரை இழந்து
நெடும்பிரிவைச்சந்தித்த
ஒவ்வொரு முறையும்
இத்தோடு முடிந்தது
என் வாழ்வென்று நினைத்ததுண்டு.
இல்லறத்திலும்
தோல்விகளை சந்தித்தபோது
தனித்துப்போனதாக தளர்ந்ததுண்டு.
இறுதியாய்
மரணநாட்களாலான
முள்ளிவாய்க்கால் நோக்கிய வாழ்வின்போது
இத்தோடு என் வாழ்வு அஸ்தமிப்பதாய்
நிச்சயப்படுத்திக்கொண்டேன்.
இப்போது
புரட்சியை மீள உருவாக்க நினைக்கிறாயென
நான் இனத்துவேசிகளால்
சிறைவைக்கப்பட்டிருக்கும் தருணத்தில்
எல்லா சந்தர்ப்பங்களையும்நினைத்துப்பார்க்கின்றேன்.
என்னிடம் ஒற்றைச்சிறகல்ல
மற்றச்சிறகொன்று
எல்லா  தருணங்களிலும் இருந்திருக்கிறது
இப்போதும் கூட.
அது மிகப்பெரிதென்றும்
பறவையை நினைக்கும்
வானம் போன்றதென்றும்
ஆதியும் அந்தமுமில்லா ஆழத்திலிருந்தும்
உந்திக்கிளம்புமென்றும் உணர்கிறேன்.
இப்போது
எங்கள் தெருக்களில்
நிறைய பறவைகள் மனதோடுரசிப் போகின்றன.

அடிவேரின் குளிர்ச்சி


பொன்-காந்தன்






குருவிச்சி நாச்சி
நீ இல்லாத நாட்களில்
என் குதிரைகளின் குழம்புகளில்
ஓசை முடிந்துவிட்டதாக உணர்கிறேன்.
அவை
கழுதையை போலவோ
அழுக்கு நிறைந்த பன்றியைப்போலவோ
என்னை ஏற்றிச்செல்கின்றன.
உனது எதிர்பார்ப்புகளில்
உலவித்திரிந்த நாட்களில் காடு வழிவிட்டது.
இப்போது இலைக்குஇலை தடைகள்.
மரத்துக்கு மரம் காயங்கள்.
நான் எங்கு நிற்கின்றேன்.


உனது தைலங்கள் தடவிய நறுமணமும்
குருவிகளின் ஓசையும் கலந்த
உன் சங்கீதமும் எங்கும் பரவியிருக்க
நான் உனக்காக எல்லாவற்றையும் இழக்கவும்
எல்லாவற்றையும்  எடுக்கவும் சித்தமாயிருந்தான்.
இப்பொழுது ஒரு மாதிரி இருக்கின்றது
பெரிய வயிற்றில் இருந்து
குமட்டுவது போன்றிருக்கின்றது எனது வார்த்தைகள்.
  குருவிச்சிநாச்சி!
அடர்ந்த வேரின் குளிர்ச்சியாய் இருந்த நம் காதல்
எதை எழுதிச்செல்லப்போகின்றது இளவரசர்களுக்காக......

அஞ்சலி





பொன்-காந்தன்





பூக்களும் இலைகளும்
தலையில் விழவிழ
தளிர்களும் பனித்துளியும்
மேனியில் படபட
புல்வெளி கால்களில்
தழுவிட தழுவிட
காடு கலையபாய்ந்தோடி
வேட்டையாடி முடித்தாய் மானை.
வேட்டைக்காரா!
எங்கோ தொலைந்தாய் அஞ்சலியில்
Ş