.

Saturday, 25 January 2014

அம்மாவின் விடுதலை -பொன்.காந்தன்



அம்மாவின் விடுதலை
--------------------------

பத்திரிகையை பக்கம் விடாமல்
அவசரமாய் படித்தாள் அம்மா.
இளம்பெண்கள் யாரும்
அவர்களால் கைது செய்யப்படவில்லை.
பெருமூச்செறிந்தாள் அம்மா.

ஆழ்ந்த விடுதலை அவள் முகத்தில்.

அம்மாவின் நாட்கள் -பொன்.காந்தன்






அம்மாவின் நாட்கள்
-------------------------
துாரத்தில்
எங்கோ கேட்கும்வெடிச்சத்தங்களால்
நான் எத்தனை முறை
செத்திருப்பேன் என்பது
எனக்கு மட்டுமே தெரியும்

நீ எங்கோ நின்றிருந்தாலும்
வெடியோசை கேட்குமிடத்தில்தான்
நீ நிற்கிறாயென எண்ணி
இதயம் எங்கெங்கோ மோதுண்டு
விழுந்து களைத்திருக்கும்.
நான் உன் அன்னையல்லவா மகனே!
இப்போது
வெடிச்சத்தங்களும் இல்லை

நீயுமில்லையடா மகனே!

அடிவேரின் குளிர்ச்சி-பொன்.காந்தன்






அடிவேரின் குளிர்ச்சி
----------------------------
குருவிச்சி நாச்சி
நீ இல்லாத நாட்களில்
என் குதிரைகளின் குழம்புகளில்
ஓசை முடிந்துவிட்டதாக உணர்கிறேன்.
அவை
கழுதையை போலவோ
அழுக்கு நிறைந்த பன்றியைப்போலவோ
என்னை ஏற்றிச்செல்கின்றன.
உனது எதிர்பார்ப்புகளில்
உலவித்திரிந்த நாட்களில் காடு வழிவிட்டது.
இப்போது இலைக்குஇலை தடைகள்.
மரத்துக்கு மரம் காயங்கள்.
நான் எங்கு நிற்கின்றேன்.


உனது தைலங்கள் தடவிய நறுமணமும்
குருவிகளின் ஓசையும் கலந்த
உன் சங்கீதமும் எங்கும் பரவியிருக்க
நான் உனக்காக எல்லாவற்றையும் இழக்கவும்
எல்லாவற்றையும்  எடுக்கவும் சித்தமாயிருந்தான்.
இப்பொழுது ஒரு மாதிரி இருக்கின்றது
பெரிய வயிற்றில் இருந்து
குமட்டுவது போன்றிருக்கின்றது எனது வார்த்தைகள்.
 ஓ குருவிச்சிநாச்சி!
அடர்ந்த வேரின் குளிர்ச்சியாய் இருந்த நம் காதல்
எதை எழுதிச்செல்லப்போகின்றது இளவரசர்களுக்காக......

அடையாளம்-பொன்.காந்தன்





அடையாளம்
----------------
பறவை வாழ்வை
சிறகில் நிச்சயித்து வைத்திருக்கின்றது.
எமக்கு எது
ஆளுக்காள் வேறுவேறு சொல்கிறோம்.
அதனால்தானோ என்னவோ

பறக்க முடியால் இருக்கின்றோம்.

பனிக்குருவி ---பொன்.காந்தன்



பனிக்குருவி
---------------

பனிக்குருவி பனிக்குருவி
பனிக்காட்டு சேதியென்ன
பனங்காடு நினைவில் வர
பசி மறந்து போனாயோ

பணம்கோடி வந்தாலும்
மனம்கொண்ட வாழ்வொன்று
இனம் நாடிவந்தாலே
எந்நாளும் இனிப்பென்று
உளம் சோர்ந்துபோனாயோ

பனித்துளியும் கண்ணீரும்
மணிக்கணக்காய் உனை வருத்த
பகலிரவு தெரியாமல்
உனதெண்ணம் சிறகுதைக்கும்
இனி துாரமில்லையென
இதயத்தில் மழைதுாற
இடிவந்து பாய்ந்ததாலே
இறகுடைந்து போனாயோ

தொழுவத்தில் பிறந்தார் போல்
உன் தோளில் நெடும்பாரம்
புருவங்கள் உயர்ந்திருக்க
பூங்காற்றை அழைக்கின்றாய்
துருவத்தில் இருந்தேனும்
பருவத்தை அழைத்துவர
பாடுகள் நுாறுனக்க
பாதைகள் சேறழுக்கு..

இன்னதென  தெரியா
இறுதிவிசை உனையெழுப்ப
மற்றவர்கள் மாசபையில்
மனுநீதி கேட்கின்றாய்
என்ன விதி உனக்கின்று...
என்னுறவாய் நின்றதுவா

கோட்டாலே மணிதுலக்கும்
மாட்டுக்கும் மனம் கசிந்த
மாமன்னர் இன்றுண்டா-நீதி
கேட்டாலே நெருப்பாகும்
நீசர்கள் பூமியன்றோ
கூட்டாலே குஞ்சுகளை
குழறிவிழவைத்த
கோட்டானை கூண்டொன்றில்
ஏற்றாதோ உன் தாகம்

கூடொன்று உன் கனவில்
குவலயத்தில் கட்டிவிட
நாளொன்று கேட்கின்றாய்
நாடெல்லாம் ஓடுகின்றாய்
காடெல்லாம் வல்லுாறு
களித்திருக்க பனிப்பேடை
தன் குஞ்சை இனிக்காக்க
தமிழ் வீடு கேட்கின்றாய்..

இமயத்து சாரல்வரை
இறக்காத உன் தாகம்
சமயத்தில் சரிந்ததென்ன
சதி வந்த காலம்தான்
பதிவிட்டு பலதிசையும்
பறந்துவிட்ட உன் வாழ்வு
விதி கெட்டுப் போனதென்று
விழி கலங்க எது நியாயம்
மதி கெட்டுப் போகவில்லை
மனமே! நின் மானமோ சாகவில்லை.

பனிக்குருவி பனிக்குருவி
பனிக்காட்டு சேதியென்ன
பனங்காடு நினைவில் வர
பசி மறந்து  போனாயோ




Ş