எப்போதுமொரு கோரிக்கையோடு
நடந்துபோகின்றது
இஸங்கள் பற்றி எதுவும் தெரியாத
வறண்டுபோய்க்கிடக்கின்ற வாழ்க்கை
நீலம் பச்சை மஞ்சள் சிவப்பு
கறுப்பு வெள்ளை
இதில் எதில் கொடி செய்து பிடித்தாலும்
கட்சியோ மதமோ
கட்டிப்புரள்கிறது தெருவில்
வானத்தில் எச்சிலும்
மரங்களில் கொம்புகளும்
சூரியனில் கற்களும்
காற்றில் துாசணமுமாய்
இஸங்கள் மீது நசியுண்டு கிடக்கின்றது
ஆதியின் அழகிய நிர்வாணம்
இந்த சுவரொட்டியையும்
தவறவிடப்பட்ட பையைபோல
விட்டுச்செல்கின்றது வாழ்க்கை
உரிமை கோரமுடியாத அச்சத்துடன்.....
No comments:
Post a Comment