.

Saturday, 8 November 2014

கடைசி நாட்களை எழுதிப்பார்த்தல் --பொன்-காந்தன்













முள்ளிவாய்க்கால்
அங்கே எல்லோரும் இறந்துவிடுவோமென
முடிவெடுத்திருந்தார்கள்.
அது அடுத்த கணத்திலென
அதிர்ந்து  போயிருந்தார்கள்.
மரணத்தை எதிர்பார்த்த அநேகருடன்
எதிர்பார்க்காதவரும் கூட
ஒருவர் மட்டுமே போகக்கூடிய
ஒடுங்கிய பாதையில் திடுமுட்டாய்
சந்திப்பதுபோல
மரணத்தை சந்தித்தார்கள்.
நானுமிருந்தேன்
நுங்குக் குலையைபார்ப்பது போல
மரணம் என்னையும் பார்த்தது.
மரணம் மரணம் மரணமென்று
வெளி நிறையச் சொன்னாலும்
அந்த மரணத்தை சொல்ல முடியவில்லை.
மரணத்துக்கு நடுவில் நான் நின்று கொண்டிருந்தேன்.
மரணத்துக்கு நான் என்ன உறவு
அதற்கு என்ன பெயர்
பார்த்துக்கொண்டிருக்க பெய்கிற
மழைபோல
பார்த்துக்கொண்டிருக்க மரணம்
பார்த்துக்கொண்டிருக்க வெள்ளம்போல்
பார்த்துக்கொண்டிருக்க இரத்தம்.


நான் எப்படி இருந்தேன்
கண்முன் மணற்சிலை
உடைந்து குவிவதாய் முன்னே உயிர் மனிதன்.
அக்கணம்
நான் வாழ்வில் ஏதாவது
எல்லையை தொட்டிருப்பேனா.
அப்போது
பிரபஞ்சத்தை நிறைத்திருக்கக்கூடிய
பட்டாம்பூச்சிகளை பறக்கவிடும் சக்தியும் ஏக்கமும்
என்னிடம் இருந்ததா!
இருக்கலாம்
இப்போது மரணங்களை எப்போதாவது
கேள்விப்படுகிறபோது
பதட்டமில்லை அவகாசமில்லை அழுகையுமில்லை.
இழந்துவிட்டதாயுமில்லை.
பிடரிக்குப்பின்
இலைகள் உதிர்ந்துவிழுவதுபோலஅது.
இப்போது
துப்பாக்கிகளை காணும்போது மட்டும்
நான் மிகவும் தொலைவிலிருக்கின்றேன்.
அது உயிரறிந்த எல்லை
வானத்தைப்போல நீலமாயுமிருந்தது
அது ஒரு அலாதியான தொலைவு
காத்துக்கொள்ளும் புதைவுமென்பேன்.
அந்த மரணங்கள்
மார்பில் அடர்ந்த உரோமங்கள் மீதும்
முகத்தின் மீதும்
விரல்களின் மீதும்
அதிக பிரியத்தை இப்போது ஏற்படுத்துகின்றது.
காண்கின்ற எல்லாவற்றையும்
நான்  காதலிக்கின்றேன்.
! துருவமே
நீயும் அந்த மரணங்களிலிருந்து மீண்டதாய்
ஒரு பொய் சொல் உன்னை நான் காதலிக்க
இரவிலும் மின்னாத நட்சத்திரங்களே!
நீங்களும் அந்த மரணத்தில் இருந்து மீண்டதாய்
ஒரு பொய் சொல்லுங்கள் நான்  உங்களை தீராக்காதல் கொள்ள.


அந்த மரணம் வந்திருக்குமா எனக்கும்
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்
ஏன் வரவில்லை மரணம் எனக்கு
அருகில் வந்து மூச்சில்
மரங்கொத்திபோல இரண்டு
கொத்து கொத்திவிட்டுப்போனதா
ஏன் வரவில்லை மரணம் எனக்கு
அழகிய குழந்தையாய்
தாயில் முலையூட்டிக்கொண்டிருக்கவில்லை என்பதாலா
அழகுபொங்கும் கன்னியாய்
நான் தோன்றவில்லையா
குழந்தைகளை அணைத்தபடி
ஒரு தந்தையாய் நான் இருக்கவில்லையா
ஏன் எனக்கு மரணம் வரவில்லை.
வந்திருந்தால்
எப்படி வந்திருக்கக்கூடும்
என் சிறு மகனுக்காய் ஒரு உரொட்டித்துண்டு தேடிய பொழுது
உரொட்டியும் கையுமாய்
மகனை அழைத்த உதட்டோடு
என்உயிர் பிரிந்திருக்குமா
குருதியும் நீரும் சொட்ட சொட்ட
தலை துவட்டாதபடி
மண்ணை விறாண்டிமடிந்திருப்பேனா
பதுங்கு குழியொன்றில் விடியும்வரை
எவனோஒருவன் காணாதவரை
எனது மரணம் அறியப்படாத மரணமாய் நிகழ்ந்திருக்குமா
கைகள் பின்னே கட்டப்பட்டு
முழந்தாள்களில் குருதிவடிய
இழுத்துச்செல்லப்பட்டு
என் பெயர் துாசிக்கப்பட்டு
எனக்கான மரணம் எனக்கு காட்டப்பட்டு
என் மரணம் நிகழ்ந்திருக்குமா
காத்திருக்கும் அவளின் மரணம் வரும்வரை
மரணித்திருக்கமாட்டேனென்ற முகவரியோடு
என் மரணம் யாருமறியாதபடி
இதுவரை தொடர்கிறதா.
ஏன் எனக்கு மரணம் வரவில்லை
பூமியின் எல்லா துயர்களோடும்
நீயும் மரணியென கட்டளையிடப்படுகிறதா
!இனி வரும் பூமியின் குழந்தைகளே
எந்த வலியுமற்று
உங்களை எழுதிப்பார்க்க ஆசைப்படுகிறேன்.

No comments:

Post a Comment

Ş