.

Monday, 26 May 2014

முடிசூடும் மோடிக்கு வன்னி மடி தீட்டும் வாழ்த்தும் வரவேற்பும்

பொன்-காந்தன்

 

 







மோடிஜி!
காந்திநகரில் இருந்து பாயும் கங்கையே! வணக்கம்!
தேங்கி நின்ற தீரா விடாய்களுக்கு இது திருவிழாக்காலம்
ஓங்கி வளரும் உயர்சனநாயகத்தை தாங்க வந்த தருமரே!
நரேந்திரமோடிஜி!
இனி மூங்கிலில் இருந்து முகாரியை தூக்கி எறிந்துவிடவா
கூடியிருந்து கும்மியடிக்கும் பெண்டிரை மோடி ராகத்தில் முழங்கிட சொல்லவா
ஆங்கோர் இடத்தில் ஆதரவற்றுக்கிடக்கும் ஏழைகளுக்கு
இனி உங்களுக்கு காலை விடிகிறது என கடிதம் அனுப்பிடவா
தோழர்களே! கொஞ்சம் விழித்திடுக!
பாரதநாட்டின் புதிய பரதன் புகழ்மணிக்கிரீடம் சூடுகின்றான்
முல்லைக்கு தேர்கொடுத்த மூத்தகுடி வாழ்ந்த மண்ணை கொள்ளையடித்து குறைகுடம் ஆக்கியவர்களை கொழுக்கட்டையாய் பிடித்து
போய் மூலையில் குந்தியிருந்து குமுறுஎன குறிப்பெழுதிய இந்திய நாட்டின் இனிய தலையெழுத்து மகுடம் சூடுகின்றது மனதார வாழ்த்திடுவீர்.
மங்கும் சுடரினி மலைமேலிட்ட தீபமாய் எங்கும் வியாபிக்கும் ஏற்றம் தருமாம்.
பாரதப்பிரதமர் அரியணை ஆண்டவன் காணும் கனவுக்கு நிகர்
முன்னூறு பட்டங்களை முன்னிலவு முகத்தை முனிவனின் குண்டலத்தை கைவரப்பெற்று காத்திருந்தாலும்
அய்யம்தான் அக்கதிரையில் அமர்வது
அது ஒரு ஆழமான சூத்திரம்தான்.
மன்மோகன் ஏதோ கொடுத்துவைத்தவர்தான் பத்துவருடங்கள் ஒரு சித்திரமாய் இருந்துவிட்டு மனிதர் போய்விட்டார்.
இதுவரை தானாய் இயங்காத அக்கதிரைக்கு சொந்த முகவரி கொடுக்க ஒரு சுடர்மிகு முகத்தவன் வந்துவிட்டான் அவன் பெயர் மோடி
விட்டுவிடுதலையாகும் சிறகு
வேணவா மக்கள் மனச்சாட்சி
தக்கனவான விதி தடைகள் தாண்டிவரும் ஞானஒளி மானம் மகா சபையில் திக்கெட்டை கட்டிவைக்கும் காந்தம்
இத்தனையின் கலவையில் பிறந்தவனை பாரத மணிமகுடம் அழைக்குமென காற்றில் அமர்ந்து கொண்டு காவியச்செருக்குடன் பாடும் கவிஞன்
மோடியை நோக்கி முகம் மலர விரல் நீட்டுகின்றான்.
நேருவும் இந்திராவும் மொராஜிதேசாயும் அடல்பிகாரிவாஜ்பாயும் இன்னும் பலபேரும் நிலவாய் ஜொலித்த கதிரையில்
நரேந்திரமோடியெனும் குஜராத்தின் கோமகன் குந்தியிருக்க இந்திரசபையாகுமாம் இந்திய பாராளுமன்றம் என தாராளமாய் கேட்கின்றன குரல்கள்
கூஜாவுக்குள் கிடந்த பா.ஜ.கவை என்ன மாயாஜாலம் செய்து ராஜசபையை நிரப்பிவைத்தார் மோடி.
சோனியா நாணித்தார் போனார் போங்கள்.
இந்தியத் தேர்தல் முடிவுக்கு எவர்எவரோ எதை எழுதினாலும் ஈழத்தமிழர்கள் எழுதுவது என்னவெனில்
மானுடக்கொலை பாதகரொடு கூட்டுவைத்த பாரதத்தின் அதர்மங்களை வீழ்த்திய தர்மயுத்தம் இது என்பதுதான்.
காமராஜரின் கடைசி சொத்தையும்
ஈ.வே.ராவின் எளிமை இராச்சியத்தையும்
பாரதியின் மரணப்பொழுதுகளையும்
எம.ஜி.ஆரின இதயத்தைம்
கடைக்கு பேப்பர் போட்டு பெருந்தலைவரான அப்துல்கலாமையும் ஆபிரகாம்லிங்கனையும் எண்ணி
ஆச்சரியத்தில் வீழ்ந்து பூரித்த எங்களுக்கு
இன்னோர் ஆச்சரியம் மோடிவடிவில்ரீக்கடையில் இருந்து இந்தியபிரதமர் எனும் பெரும்புகழுக்கு பாத்திரமாக
குஜராத்தின் தலைமகன் மோடிக்கு மண்டியிட்டு கிடக்கின்றது மகாபாரதம்
மாண்புமிகு மோடிஜி!
உங்களிடம் பிரமபுத்திராவின் பேரழகை பொங்கச் செய்யும் புதிய மந்திரம் இருக்கிறதாம்
உம் கண்ணில் இருந்து பிறக்கும் பொறியில் இந்துமாசமுத்திரத்தில் இலங்கும் ஈழத்தமிழர்க்கு சாபவிமோசனம் அளிக்கலாமாம்
அரபுக்கடலை பொய்கை ஆக்கி தேவசேனாதிபதியை தட்டியெழுப்பும் தகுதி இருக்கிறது தலைவரே உம்மிடம்
நீர் நினைத்தால் காஸ்மீரியனின் கனவுகளுக்கு கைகால் முளைக்கும்.
என்ன செய்யப்போகிறீர்கள்
பருவமங்கையின் உள் மனதை அறிய தவம் கிடக்கும் வாலிபர்போல இப்போது உம் மனதை அறிய உருள்கிறது உலகம்.
இந்துமாசமுத்திரத்தில் இராவணதேசத்தில் இரத்தமும் சதையும் கண்ணீருமாய் குற்றுயிராய்க்கிடக்கும் பாண்டியன் நெடுஞ்செழியனின் பரம்பரைக்கு நீங்கள் என்ன செய்வதாய் உத்தேசம்
இராமருக்கு பாலமிட்ட அணில் பிள்ளைகள்தான் ஈழத்தில் ஏதிலிகளாக இருக்கின்றார்கள்.
காலம் உங்களை ஆபத்பாந்தவராய் அனுப்பியதாய் உணர்கின்றோம்.
புதிய பாரதத்தின் புன்னகையே!
இங்கேயும் பாரும் இங்கேயும் இரங்கும் நாங்களும் இதயம் படைத்த மனிதர்கள்தான்.
மோடி வாடி பயிருக்கு மழையாய் வானுக்கு புதிய நிலவாய் இங்கே.
காந்திநகரோடு கட்டுண்டு கிடந்த கனவுப்பிரவாகம் இனி
இமயமலை தொடர்களிலும் இந்துகங்கை சமவெளியிலும் ஏன் கோணமலையெங்கும் காங்கேசன்துறைவரைக்கும் கால்பெயர்த்து நிற்குமாம் ஆரூடம்.
அன்புள்ள மோடிஜி!
நீர் கரிகால் சோழனா
நரசிம்மபல்லவனா
அக்பரா சேரன்செங்குட்டுவனா யார்!
யாராயிருந்தால் என்ன
உம்மால் பாரதமும் பக்கத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களும் இனிப்பான வாழ்வை அடைவரென்று நம்பிக்கையுண்டு.
எங்கள் இருள்கலைக்கும் எழுச்சியின் பேரால்தான் தமிழின தலைவி தங்கள் சோதரி தமிழகத்தின் பசும்புயல் ஜெயலலிதா அம்மைக்கு வாரிக்கொடுத்தார்கள் தமிழர் வாக்குகளை.
கந்தசாமியும் காமாட்சியும் உங்கள் உற்ற நண்பர்கள் மோடிஜி
இந்துமாகடலில் எவன்எவனோ புகுந்து பாரதத்தை பறித்தெடுக்கும் இரகசியத்தை மூச்சுவாங்க ஓடிவந்து முதலாளாய் கந்தசாமி உங்கள் முன் கட்டாயம் உரைப்பான்.
இடையில் விட்டுப்போன உறவை கட்டியெழுப்புவோம் நண்பனே!எங்கள் கை சுத்தமானது நம்பிக்கையுடன் நீட்டுகின்றோம் கரங்களை
நீங்கள் வசிய சக்கரவர்த்தி மோடிஜி!
போவென கதவடைத்த வெள்ளை மாளிகையில் கறுப்புநிலா ஒன்று உங்களுக்கு கைநீட்டுகின்றது.
என்ன ஆச்சர்யம்.
ஆசியாவின் கடிவாளம் உங்கள் கைக்கு வசப்படுமென்று  நம்புகின்றது ராஜதந்திரம்
உங்கள் அரசியல் யாத்திரையை திரும்பி பார்த்தால் அண்டத்தில் நீங்கள் பேராச்சிரியம் நிகழ்த்த வல்லவர்தான்.
வண்டுபோல இருக்கும் தீவுகளின் குறுநிலமன்னர்களும் உங்கள் வாசலில் மலர்கொத்தோடு கூட விலாங்குகளும் பச்சோந்திகளும் கவனம் !
மாண்புமிகு பாரதத்தின் பிரதமர் நரேந்திரமோடிஜி!
நீங்கள் முடிசூடும் இந்நேரத்தில் அபசகுனங்கள் வேண்டாம்
ஈழவன்னி மடிசூடும் இந்த வாழ்த்தையும் வற்றாத ஏக்கத்தையும் கொஞ்சம் ஏறெடுத்துப்பாருங்கள்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரைக்கும் உங்களுக்கு காவலரண் நிலம்.
காத்திருக்கின்றோம் உங்கள் அடியெடுப்புக்களை ஆவலோடு காண
நல்லது! தொடங்கட்டும் நல்லாட்சி!










No comments:

Post a Comment

Ş