கனகாராயன் ஆறு பிரவாகித்தாலும்
இரணைமடு நிரம்பி கிளைவிரித்து நுரைத்தாலும்
நீராட இளவரசியின்றி நெஞ்சு கனத்திருக்கும்.
கனகாம்பிகையாள் பரிவாரங்கள் புடைசூழ
இம்முறையும் போனாள்
புண்ணிய தீர்த்தத்தில் கலந்திருக்க.
அவள் நீள் விழியின் கண்ணீர்
பொறிக்கடவையிலும்
புளியம்பொக்கணையிலும்
ஆட்காட்டிகளாய் அலறியடித்து பறக்கின்றன.
இரணைமடுவின் அன்னதான வாழை இலைகளில்
ஒரு கவளம் யாருக்காகவோ காத்திருக்கின்றது.
நெஞ்சு கனத்திருக்கும்
நெஞ்சு கனத்திருக்கும்
வட்டக்கச்சியிலும் திருவையாறிலும்
நாலாம் வாய்க்காலிலும் மருதநகரிலும்
கனகராயனின் விம்மல் ஒலிகள்தான் இப்போது.
மருதத்தின் இருத்தல்
சரசங்களின்றிப் போய்விட்ட தருணத்தில்
அங்கலாய்க்கின்றது திணை புலமெங்கும்.
சாந்தபுர மீன்களுக்கு நீச்சல்குணம் வற்றிப்போக
இரணைமடுவாள் இழந்திருக்கின்றாள்
தன் நீர்க்கவிதைகளை.
மழை நாட்கள் வரும்போதெல்லாம்
காற்சட்டைகளை கொழுவிக்கொண்டு
இரணைமடு வான் பார்க்க
சிநேகிதர் படலைகளுக்கு ஓடும் பால்யகாலநினைவு
இப்பொழுது சொல்வது
இது மழையுமல்ல
இது மடுவுமல்ல என்பதுதான்.

No comments:
Post a Comment