.

Thursday, 6 November 2014

பிதற்றல் ---பொன்-காந்தன்








எதுகைமோனை தொட்டு
எழுவேண்டும் கவிதையென்று
குமரி மோகம் பட்டு
கொட்டினேன் ஆசையின்று

கவரி மானிலேறி
காராம்பசுவரைக்கும்
அவளைப்போலென்று
ஆராதித்திடவோ யான்

ஆடித்தேரென்று
பாடிக்களைத்தாலும்
மூடி இருக்கிறாளே
முந்தானை இரகசியத்தை

கோடித்தேவதைகள்
கூடி அழைத்துவரும்
சேடிப்பூவென்று
செத்தேன் கவிதையிலே

சீர் தளை தொடை அடிக்குள்
சிக்காத செம்பாவை
யார் நவ கவிதைக்குள்
நனைத்திடுவீர் சொல்வீர்

வேரினை பிடித்த
வீணையின் விரல்களை
யாரிடம் கேட்டும்
யாசிக்க மடியவில்லை

கண்ணுக்குள் சிக்காத
கசங்கா உற்பவத்தை
மண்ணுக்கு அனுப்பிய
மாதவன் யாரடா

பித்தர்கள் விரும்பும்
பெரும்சுவைக் கனியை
முற்றத்தில் விட்ட
முழுமுதல் யாரடா

வித்தகம் கோடி
விழுந்த மந்திரத்தில்
பித்தனாய் நானும்
பிதற்றிக் கிடக்கின்றேன்.

அப்பனே உமக்கு
அருளும் விருப்பிருந்தால்
என் சொர்ப்பன கனவுகளால்
சூழவிடும் பூமிதனை

No comments:

Post a Comment

Ş