முள்ளிவாய்க்கால் நாளொன்றில்
கந்தக நாற்றம் நிரம்பிய காலைப்பொழுதில்
முட்கள் பூத்த மரமொன்றின் கீழ்
மழையால்
பதுங்குகுழிகள் நிரம்பிய இரவொன்றின்பின்
அடுத்து என் உயிருக்கான சந்தர்ப்பமென
அச்சமுற்ற கணமொன்றில்
குண்டொலிகள் மட்டுமே
செவிகளில் நிரம்பி இருந்த ஓசைவெளியில்
எல்லா மனிதர்களும்
தங்கள் புதைகுழிகளில் வாழ்வதுபோன்ற
உணர்வு நிரம்பி இருக்கும்போது
சில அடிகள் துாரத்தில்
அவளும் தன் குழந்தையுமாய்
கைகோர்த்துச்சென்றென்
கண் விழிம்பில் முடிவதற்குள்
மனிதர்க்கே ஆகாத வெடி மண்டலம்
நான் இறந்து எழுந்தபோது
முட்கள் பூத்த மரத்தில்
தசைத்துண்டங்கள் கிழிந்துதொங்க கண்டேன்.
என் மனம் சிதறிய கணத்தில்
தாயும் பிள்ளையும் காணாதிருக்க கண்டேன்.
குழந்தையின் சிறுவிரல்கள் மட்டும்
எஞ்சியிருக்க கண்டேன்.
அய்யோ கடவுளே!
இப்போதெல்லாம்
கணத்தில் தோன்றும் வானவில்லை
காணும் போதெல்லாம்
அது கணத்தில் கரையும்போதெல்லாம்
அழுது சாகவேண்டும்போல் இருக்கிறது.
இத்துயர்போக
இனி என்ன அப்படி
படைத்து கிழித்துவிடப்போகிறார் கடவுள்.
No comments:
Post a Comment