நீ என் தெருவின் பேரழகி
உன்னை சுற்றி
என் பட்டம் பூச்சிகளில்ஒன்று
எப்போதும் வட்டமடித்துக்கொண்டேயிருந்தது.
உன் பற்றிய என் கனவுகளை
கொட்டினால் மட்டும் போதும்
இந்த உலகம் பேரழகு பெற்றுவிடும்.
உன் நினைவுகளால்
என் தெருவை அழகுபடுத்த பெரும்பாடெனக்கு.
நினைவுகளை அபகரிக்க வந்தவர்களை
நெருங்கவிடாமல்
சுற்றிசுற்றி ஒப்பாரிவைக்கின்றேன்.
தோழி!
பொல்லாத நாட்களில்
நீ பேரழகியாய் பிறந்துவிட்டாயே
சோழர் காலத்தில் பட்டத்து இராணியாய் பிறந்திருக்கலாம்.
தேவர் உலகத்திலேயே
கொஞ்சம் காத்திருந்திருக்கலாம்.
ஏன் அவசரமானாய்.
உன் இறுதிக்கோலத்தில்
பெண் இயேசுபோல நீ எனக்கு தோன்றினாய்.
கற்பழிக்கப்பட்டபெண் புத்தன் போலவுமிருந்தாய்
உன்னை காப்பாற்ற முடியாதவர்களின்
மண்ணில் பிறந்துவிட்டாய்.-
அழகியை காப்பாற்ற முடியாத ஆண்களாய்
காலம் எங்களை சபிக்கின்றது.
படப்பிடிப்புக்களின்போது
உன் பின்னால் நின்று விரல்களால்
உன் தலைக்கு கொம்புவைத்து பார்த்ததுண்டு
நிஜமாக உனக்கு இரண்டு கூரிய கொம்புகள்
முளைத்திருந்திருக்கலாம்.
அதனால் பொல்லாத நாட்களில்
நீ தப்பித்திருக்ககூடும்.
சிதைந்த உதடுகளோடும்
மார்புகள் இன்றியும்
இடையின் கீழ்மிருக உடலோடும்
பொல்லாத நாட்களிலிருக்க
குலதெய்வங்களை நோக்கி நீ
கடும் விரதமிருந்திருக்கலாம்.
நாம் ஆண்குறிப்படைகளாய் வந்த
ஆக்கிரமிப்பாளனிடமிருந்து உன்னை காக்க
என்ன செய்திருக்க முடியும்.
No comments:
Post a Comment