.

Monday, 26 May 2014

இறுதி





பொன்-காந்தன்





 

நானே இறுதி தமிழ் கைதியெனில்
பல நுாறு விலங்கு பூட்டி
முள்முடிகள் ஏற்றி
வன்மங்கள் சுமத்தி
காறி உமிழ்ந்து இழுத்துச்செல்
உன்  சாலையெங்கும்.

நானே தமிழர்களின்
இறுதி மரணமெனில் சுடு
பாதி உயிரை வெட்டியெடு
மீதி உயிரோடு என்மீது
உன் வெற்றி கல்வெட்டை எழுது
புள்ளியாய் என் பிணம்தெரியும் ஆழத்தில் புதை.

நானே இறுதி யூதாஸ் எனின்
வெள்ளிக்காசனைத்தையும் தா
தமிழர் நிலத்தையும் கடலையும் வானையும் காற்றையும்
வள்ளுவன் கம்பன் பாரதியையும்
புறநானுாறு படைத்தவனையும்
சேரசோழபாண்டியரையும் அகத்திணையையும்
திருமுறைகளையும் இன்னும் காட்டுகிறேன்
நீ எடுத்துக்கொள்.
இறுதியாய் ஒரு முறையேனும்
தமிழர் ஆள்வதையல்ல
வாழ்வதை பார்க்க
பூமி ஆசைகொள்கிறது
சந்தர்ப்பம் கொடு

No comments:

Post a Comment

Ş