பனிக்குருவி பனிக்குருவி
பனிக்காட்டு சேதியென்ன
பனங்காடு நினைவில் வர
பணம்கோடி வந்தாலும்
மனம்கொண்ட வாழ்வொன்று
இனம் நாடிவந்தாலே
எந்நாளும் இனிப்பென்று
உளம் சோர்ந்துபோனாயோ
பனித்துளியும் கண்ணீரும்
மணிக்கணக்காய் உனை வருத்த
பகலிரவு தெரியாமல்
உனதெண்ணம் சிறகுதைக்கும்
இனி துாரமில்லையென
இதயத்தில் மழைதுாற
இடிவந்து பாய்ந்ததாலே
இறகுடைந்து போனாயோ
தொழுவத்தில் பிறந்தார் போல்
உன் தோளில் நெடும்பாரம்
புருவங்கள் உயர்ந்திருக்க
பூங்காற்றை அழைக்கின்றாய்
துருவத்தில் இருந்தேனும்
பருவத்தை அழைத்துவர
பாடுகள் நுாறுனக்க
பாதைகள் சேறழுக்கு..
இன்னதென தெரியா
இறுதிவிசை உனையெழுப்ப
மற்றவர்கள் மாசபையில்
மனுநீதி கேட்கின்றாய்
என்ன விதி உனக்கின்று...
என்னுறவாய் நின்றதுவா
கோட்டாலே மணிதுலக்கும்
மாட்டுக்கும் மனம் கசிந்த
மாமன்னர் இன்றுண்டா-நீதி
கேட்டாலே நெருப்பாகும்
நீசர்கள் பூமியன்றோ
கூட்டாலே குஞ்சுகளை
குழறிவிழவைத்த
கோட்டானை கூண்டொன்றில்
ஏற்றாதோ உன் தாகம்
கூடொன்று உன் கனவில்
குவலயத்தில் கட்டிவிட
நாளொன்று கேட்கின்றாய்
நாடெல்லாம் ஓடுகின்றாய்
காடெல்லாம் வல்லுாறு
களித்திருக்க பனிப்பேடை
தன் குஞ்சை இனிக்காக்க
தமிழ் வீடு கேட்கின்றாய்..
இமயத்து சாரல்வரை
இறக்காத உன் தாகம்
சமயத்தில் சரிந்ததென்ன
சதி வந்த காலம்தான்
பதிவிட்டு பலதிசையும்
பறந்துவிட்ட உன் வாழ்வு
விதி கெட்டுப் போனதென்று
விழி கலங்க எது நியாயம்
மதி கெட்டுப் போகவில்லை
மனமே! நின் மானமோ சாகவில்லை.
பனிக்குருவி பனிக்குருவி
பனிக்காட்டு சேதியென்ன
பனங்காடு நினைவில் வர
பசி மறந்து போனாயோ
No comments:
Post a Comment