.

Saturday, 14 January 2017

ஏற இறங்க நூறு


அவசரமாய் அலுவலொன்று
அழைப்பொன்றில் வந்துவிட
யாழ்ப்பாண வசு பிடிக்க
வசுதரிப்பில் போய் நிற்க
காலடியில் கறிச் சென்று
கண்டியூர் பக்கமாக
வந்ததொன்று பாட்டும்
கேட்டிணுமாய் படிவரையும்
கூட்டமுமாய்
கைநீட்டி வாஞ்சையுடன்
கூறுங்கள் யாழுக்கோ
வாருங்கோ ஏறுங்கோ
படியடியில் தொங்குகின்ற
பையனின் பல்வரிசை
இடிபடும் சனத்துக்குள்
இடியப்பமாய் சிக்குண்டு
எதுவரைக்கும் போவதுநான்
முடிபறக்க பாய்கின்ற
முழு இறாத்தல் வசுவுக்குள்
அடிவயிற்றில் நோவெடுக்கும்
என நினைத்தும் அவசரமே
என்றெண்ணி
அதன் படியில் கால்வைக்க
சாவச்சேரியில்
விதிவந்து விபத்தாகி
பதின் உயிர்கள்
பறந்துவிட்ட
கதிகலங்கும்
சேதி மீண்டும்
இடிபோல நெஞ்சில்
சடுதியாய் எழுந்து நிற்க
இருவிழிபிதுங்கி என்
ஈரல்வரை கிடுகிடுக்க
முறிகண்டிப்பிள்ளையாரை
முதலாவதாய் வேண்டிக்கொண்டேன்
முந்துகின்ற வசு ஒவொன்றும்
முடிவெழுதும் வேளைபோல்
பிள்ளைகுட்டிகளை பேரன்பு
மனுசியினை என்னுள்ள
எண்ண வைக்கும்
மடுமாதா மனசுக்குள்
பளைவரையும் இந்த
உயிர்படும்பாடு ஒன்றரிரண்டா
அங்கும் கொஞ்சம்
அள்ளி அடைந்து
ஆலப்போல் வேலப்போல்
ஆலம்விழுதுபோல்
மாமன் நெஞ்சில்
பாட்டுப்போட்டு
பாச நெஞ்சு பரிதவிக்க
பம்மிங்கில் ஏற
பதகளிப்பட்டு
அங்கங்கங்கு பிடித்து
முன்னால குனிஞ்சு
முகப்புக்கண்ணாடியால்
முகவரியை பார்க்க
விண்ணால இறங்கி
விசுக்கென்று வந்ததுபோல்
சன்னலோடுரசி சறுக்கியொன்று
போகும்போது
உச்சிலடி அம்மனை
ஊரிலுள்ள பிள்ளையாரை
நல்லூர் கந்தனை
நான் நினைந்துருகி நின்று
நாவற்குழி தாண்டும்போது
சுண்டல் காரனோ சுடச்சுட என்கிறான்
அண்ணல் நான்படும்
அவஸ்த்தைகளை
சுண்டலே நீயறிவாயா
ஏற இறங்க காசு நூறுதான்
பத்திருபதாயிரத்துக்கு நேத்தி
செத்துப்போய் நான்
வசு ஸ்ராண்டில் இறங்குகையில்
றைவர் முகம் பார்த்தேன்
அது இறைவர் முகம்தான்!!

முள்ளிவாய்க்காலை மறக்காதே அலப்போவை மறக்காதே


எந்த வல்லரசின் தூதர்களின்
முதுகிலும்
யாரும் சுட்டதாய் ஞாபகம் இல்லை
தமிழீழத்தை மறக்காதே
முள்ளிவாய்க்காலை மறக்காதே
துப்பாகியுடன் எவரும்
தொண்டையில் நீர்வற்ற
உலகத்தின் மூலைவரை குரல் கேட்க
கத்தியதாக குறிப்புக்கள் இல்லை
தூதர்கள்
புகைப்படக்கண்காட்சிகளில்
சுதந்திரமாக பயங்கரவாதம் பற்றி
பேசிக்கொண்டிருந்தார்கள்
எல்லா விருந்துகளிலும் மகிழ்ந்திருந்தார்கள்
அவர்கள் எல்லோருக்கும் முதுகில்
புளுப்போல மரணம் ஊர்கின்ற
திகிலான அனுபவ நாட்கள் ஏற்படவில்லை
தங்கள் மெய்ப்பாதுகாவலர் பற்றிய பூர்வீகங்களை
அவசரமாக தேடி தேடி
தூக்கம் தொலைந்த இரவுகளை
அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் பரிசளித்ததாக
எந்த கவிதைகளும் இல்லை
தனது வாகன ஓட்டுனர்
வாயிற்காவலர்
நம்பிக்கையான முடி திருத்துனர்
சமையற்காரர்
எல்லோர் மீதும்
ஒருவனின் முகமே படிந்திருந்திருப்பதுபோல
மரண பிரம்மையை
எவரும் கொடுத்திருக்கவில்லை
ஆயினும்
முள்ளிவாய்க்காலில்
பயங்கரவாதம் அழிக்கப்பட்டதாக
உலகத்திற்கு பிரகடனம் செய்யப்பட்டது
அலப்போவை மறக்காதே
சிரியாவை மறக்காதே என்றபடி
துப்பாக்கி ஏந்தி
இருபத்திரண்டே வயதானவன்
அமைத்த மரண களரி
இறந்தவர்களுக்கான கடவுள்
இரக்கமில்லாதவன் என்கிறதா
ஒரு குழந்தையின் மரணத்தில் எழுந்த
மானுட நேயம் என்பதா
தன்னினம் மடிகிறபோது
எங்கிருப்பினும் எவனொருவனும்
எதையோ செய்வான் என்பதா
முடிவாக
கைகட்டி வாய்பொத்தி
தலைகுனிந்து நின்று
வல்லரசு சொல்கிறது
அது ஒரு பயங்கரவாதத்தாக்குதல் என்பதை
எல்லா ஓட்டைகளாலும் உள்வாங்கிக்கொண்டு
உறங்கி இருளிலேயே எழுவதா!!

பெட்டகப்பேச்சு


மாலை தேனீரை மசமசப்பு தீர்ந்துவிட
மடியில் வைத்தபடி
வடையில் ஒரு கடியும்
மாண்புமிகு துணையாளின்
சீனி தணித்த
சிக்கனத் தேனீரின் குடியும்
படியில் இருந்தபடி
பழைய பத்திரிகை சிலதை
முதிரைப்பெட்டகத்தின்
முதல் கதவை முக்கித்திறந்து
தட்டியிழுத்து தடவியெடுத்து
பத்திரப்படுத்திய பரவசத்துடன்
பக்கத்தில் நின்ற
பாசத்துணையை பார்வையால் துளாவி
பக்கங்கள் சிலதை திறக்க
பால்ய நினைவுகள்
வெட்கத்தில் அவள் விறாந்தையில் அகல
சித்திரம்போலொரு வாழ்வை
சீக்கிரம் தொலைத்தது தெரு
சின்ன வயதில்
பட்டுக்கோட்டை எனக்கு
பாட்டெழுதும் கவி
கல்யாணசுந்தரத்தின்
கொட்டும்;சிந்தனையால் அறிமுகம்
எட்டயபுரம் கூட
அப்பெருங்கவி ஆற்றலில்தான்
மட்டுநகர் விபுலானந்தரின்
வித்தகத்தில்
பண்டாரவன்னியனால்
கற்சிலை மடு
கட்டையில் போனாலும்
கரியிலும் மறவாது
ஆழிக்குமரனால்
அலைதழுவும் ஊரொன்று
அண்ணன் பிரபாகரனால்
வல்வெட்டித்துறை
வல்லமை தவில் தட்சணாமூர்த்தியால்
அளவெட்டிபதி
அந்நாளில் உள்ளத்தில்
அறிமுகம் ஆனது
விக்டரால் அடம்பனும்
வீரி மாலதியால் ஆட்காட்டிவெளியும்
மில்லரால் நெல்லியடியும்
உள்ளத்தில் கரைந்ததுகாண்
சொல்ல வெட்கம் இன்று
கசிப்பால் சில ஊர்கள்
கஞ்சாவால் சில ஊர்கள்
கற்பழிப்பால் சில ஊர்கள்
வாள்வெட்டில் சில ஊர்கள்
இனிவரும் சந்ததிக்கு
இந்த நாள் பத்திரிகை
எடுத்துப்போகிறது.
வடக்கரசின் அடிபிடியால்
கைதடியும் கூட
தடுக்குப்பட்டு தலைகுனிந்து
தலைப்புச்செய்தியாகிறது.
இந்நாள் பத்திரிகையை
எடுத்து வைத்து பெருமைகொள்ள
இனி எனக்கு முடியாது
எடடி ஒரு நெருப்பெட்டி
கடந்த ஆறாண்டு
தொந்தி பந்தியோடு
அந்திவரை வாசிக்க
அகன்று விரிந்து வந்து
மந்து பற்றி கிடக்கும்
பத்திரிகைகளை
அக்கினிக்கு இரையாக்கு!!!

இலச்சுமி


மட்டற்ற மகிழ்ச்சி
மாடு வாங்கினார்
முன்னொருநாள்
மயில்வாகனத்தார்
கொட்டிலிட்டார்
குளிருக்கு நெருப்பிட்டார்
கட்டாக புல்லுவெட்டி
கொக்கை கட்டி
பக்கத்து வேலியிலும்
பதம்பார்த்து
குழை கட்டி
புண்ணாக்கு கஞ்சியென
பொழுதெல்லாம்
அம்மாட்டுக்கு
கைத்தீன் கவனிப்பு
கன்னிமாடு
கத்தத்தொடங்க
கட்டியிழுத்துப்போய்
பட்டி நான்பன்னொன்றுடன் பழகவிட்டார்
எட்டுநாள் கழிய
.இளைத்துப்போன மாட்டை
தட்டிக்கொடுத்து
தலைப்பிரசவ நாளை கனவுகண்டு
வீடு கொண்டு வந்து
கன்று தாய்ச்சியென்று
நின்று கவனித்தார்
பட்டிப்பொங்கலுக்கு
நெற்றியில் ஒரு பொட்டும்வைத்து
நெகிழ்ந்தும்போனார்
மாதமாகி
மாடு கன்றீன
நேத்தியும் வைத்தார்
நினைத்ததுபோல்
யாவும் நலம்
அனுபவஸ்த்தர் துணையோடு
கடும்பு கறந்து
காய்ச்சிபரிமாறி
காலைமாலை இனி
கறந்துகொடுத்து
பலனை பெறலாமென
பக்கத்தாரோடு
பால் கொடுக்கப்பேசி
அன்றோர் காலை
அகன்றவாய் செம்புடன்
குந்தியிருந்து
கொழுத்த முலையில்
குளிர்ந்த நீர் தெளித்து
பற்றியிழுக்க
படாரென்று காலடி
பல்வரிசைப்பக்கமாய் விழ
குப்புற விழுந்து செம்பு
குத்திக்கரணமடித்தடங்க
திட்டியபடி எழுந்து
எட்டிநின்று
வெட்டுறவர் கையில் கொடுப்பேன்
விற்றுவிடுவேன் என
வெருட்டிபின்
முட்டியமாட்டுக்கு
முக்கால்வாளி புண்ணாக்கு வைத்து
முதுகை தடவி
இலச்சுமி என அன்போடழைத்து
மெல்ல முலையில்
மூன்றுவிரல் பிடித்து
கள்ளமாட்டை வளைத்து
கறந்தார் சொம்புநிறைய பால்
இன்றவர் பட்டியில்
இலச்சுமி புவனா பூமணி
இன்னும்பல
கத்தினால் விட
கறுத்த நான்பனொன்று
மட்டற்ற மகிழ்ச்சி மயில்வாகனத்தாருக்கு
நமக்கும்தான்!

வதனி ரீச்சர்


வதனி கவனி
இதுவரை நீ வதனி
இனி
தடைதாண்டி
போட்டி பரீட்சை
விடைதாண்டி
வேலையற்ற
பட்டதாரியென்ற
பழி தாண்டி
படிப்பித்தல் நியமனத்தில்
படியேறுகின்ற ரீச்சர்வதனி
அரச நியமனங்கள்
ஆயிரம் இருந்தாலும்
ஆண்டவனுக்கு அருகில்
அமரும் அதிஸ்டம்
அம்மணி உனக்கு
காலை ஒன்பது மணிக்கே
இதுவரை தொடங்கிய உன் நாள்
நாளையிலிருந்து
அதிகாலை நான்கிற்கே ஆரம்பம்
பள்ளியெழுந்து நீ
அம்மாளாச்சி போலவே
தெருவில் இறங்கப்போகிறாய்
காலை வணக்கம் சொல்லியே
உன்னை ஒரு களங்கமற்ற கூட்டம்
சுற்றிவரத்தொடங்கும்
கைபற்றியிழுக்கும்
புன்னகை பூரிப்பு மௌனம் என
வெள்ளைச்சீருடைக்குள் தோன்றும்
பாசைகளையெல்லாம்
நீ மொழிபெயர்த்தாகவேண்டும்
வதனி கவனி
நேற்றுவரை நீவதனி
இன்று நீ ரீச்சர்வதனி
இனி நீ ஆயிரம் கண்களுக்குள் நடக்கிறாய்
காயதாய் இருக்கும் உன் காதல்கூட
கனியாது போகலாம்
காட்டுமல்லிகை போல
உன் சின்னக்கனவுகள்
வாசம் நுகரப்படாமலே
வாழ்ந்துமுடிந்தும் போகலாம்
ஆழமான உள்ளங்களின் கதவு
உனக்கு அகன்று திறந்திருக்கிறது
ஆங்கோர் உயர் பீடத்தில்
நீ ஓய்வு பெறும் போது
சூட்டுவதற்கான
மண்ணில் அழியா மகா கிரீடங்கள்
அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றது
எல்லாவற்றின் முன்பும்
உன் கற்பித்தல் என்ற
கனவுப் பாதையில் நடக்கத்தொடங்குகிறாய்
அதிபரை கரைக்கும் மருந்து
ஆங்காங்கு வந்து
இடைக்குள் செருகும்
கற்களை அகற்றும் கைவசியம்
சேடிகளின் வாயால்
உன் சிறப்புரைக்கவைக்கும்
காட்டின் நடுவில் இருக்கும்
புற்றில் சீறுகின்ற
ராஜநாகத்தின் நவரத்தினகல்
எல்லாம் வரப்பெற்ற வல்லமையாகுவாய்
மருதோண்டிவைத்து
மகிழ்ந்திருந்த உன் உள்ளங்கை
வெண்கட்டி விளைந்திருக்கும்
கைதடுமாறி உன் கன்னங்களில் கூட
சின்னமாயிருக்கும்
எல்லாமே
எண்ணற்றோர் எதிர்காலத்தை
நீ தீர்மானித்துக்கொண்டிருப்பதன் அழகு
இனி
பச்சை இல்லமா மஞ்சள் இல்லமா
சிவப்பு இல்லமா உனது
உன் ஆடைக்கனவுகளில்
அரைவாசி நாளையோடு முடிகின்றது
இனிச் சேலைக்குள் இருந்தே
ஆயிரம் வானவிற்களுக்கு வர்ணம்
கொடுக்கப்போகிறாய்
சுற்றுலாவிற்கு உன்னை முதல்வர் அழைத்து
முற்றிலும் நீயே பொறுப்பென்பார்
அப்போதெல்லாம்
திருமணம் ஆகாமலே
திரும்பி வந்து இறங்கும்வரை
பத்து நல்லதங்காளாய்
இருநூறு பிள்ளைகளுக்கு
தாயாக மாறவேண்டும்
ஆயாவாயும் மாறவேண்டும்
கறுத்தப்புள்ளிகளின்றி உன் பயணமிருந்தால்
அடுத்துனக்கு ஆசனங்கள் தேடிவரும்
தடுட்தாட்கொள்கின்ற சந்தர்ப்பங்களும்
தானாக விளையலாம்
நீ படுக்கமுடியாது இனி
பாடவேளைகள்தான் கனவாய் வரும்
படபடப்பும் இருக்கும்
புதிதாயும் ஏதும் கொண்டு செல்லவேண்டும்
உலகப்புதினங்களை உற்றுநோக்கவேண்டும்
அல்வா எடிசன்கள்
ஆபிரகாம் லிங்கன்கள் அலெக்ஸ்சாண்டர்கள் பிரபாகரன்கள்
ஓசாமாக்கள் தெரேசாக்கள் டயானாக்கள்
மூன்று இலைகளோடு உன் முன்
வகுப்பறையில் வந்திருக்கும்
எல்லாவற்றுக்கும்
உன்னிடம் பதிலிருக்கவேண்டும்
ஊமையானால்
உள்ளத்தில் வழங்கப்பட்ட உனக்கான உயர்பதவி
மெல்ல மெல்ல அகற்றப்படும்
என்ன செய்யப்போகிறாய்
நேற்றுவரை நீ வதனி
இனி நீ ரீச்சர் வதனி
கன்ன மயிர் பழுத்து
கடைசிப்பெருங்காலத்துள் நுழைகின்ற
எந்தனது நெஞ்சில்
சங்கரப்பிள்ளை சோதிநாதன் விந்தன்
மனோகரி குமார் அருள்நேசன் சசிகலா சிவகௌரி
சிறீசெல்வராஜா மோட்சலிங்கம் கனகேந்திரம் என்றொரு பட்டியல் நீள்கிறது
இவர்கள் என் ஆசிரியர்கள் இன்னும் பலர்
பக்கங்கள் பலவற்றை அலங்கரிப்பர்
ரீச்சர்வதனி
உந்தனது காலத்தில்
எத்தனை உள்ளங்களில் உட்காரப்போகிறாய்!!

இருத்தல்



உடைந்து விழுகின்றன
பெருஞ்சுவரின் கற்கள்
இப்போது
உள்ளிருந்தே உதைக்கப்படுகின்றது
கட்டியவர்களும் சிக்குண்டனராம்
அவ்வப்போது இடுக்குகளினூடே
புறப்படும் இனிய கீதம்
சாமகானத்தின் உருப்படிகளை
தேடியலைகின்றது
அவ்வப்போது இடுக்குகளினூடே
நசியுண்டு பாயும்
ஒளி வட்டங்களின் கீற்று
ஸ்பரிசத்தால் துளிர்களை
நீவிவிடும் விடாயில்
வால்களின் தீப்பந்தம் அணைகின்றது
உள்ளிருந்துதைப்பில்
மலர்ந்திருக்கும் தாமரை
இதழ்களின் நடுவில்
பிரசவக்குழந்தையின் அழுகையில்
இரவின் நிறத்தில்
வாசத்தில்
வெண்மை பரவும் மல்லிகையில்
காத்திருக்கச் சொல்கிறது
உடைந்துவிழும் பெருஞ்சுவரின் கற்கள்

ஒரு உண்மை!!


சித்திரை நாள் குறித்து
சீர் வரிசை சரிபார்த்து
இக்கணம் இருந்துபேசி
இருவீட்டார் அழைப்பாக
பத்திரிகை அச்சேற்றி
பலருக்கும் போய்ச்சேர்த்து
பல காரச் சூடுவைத்து
பந்தலையும் வரவைத்து
பழக்குலையும் கட்டிவிட்டு
பம்பரமாய் சுழன்ற அசதி
பன்னிரண்டு நடுநிசியில்
பாம்படித்துப்போட்டதுபோல்
படுதூக்கம் சரித்துவிட
பந்தலுக்குள் சிலபேரும்
பத்தியில சில கிழடும்
பெண்புரசு அறைக்குள்ளும்
புரண்டு கண் செருகிவிட
நாலரைக்கு வைத்த அலாம்
நாலுபேரை எழுப்பிட
அறைக்குள் வெளிச்சம்வர
வேதியக்கை விறைத்துப்போனார்
விடிஞ்சால் மணத்துக்கு
வெளிக்கிடும் மல்லிகையாம்
மணவாட்டி நித்தியா
மாயமாய் காணவில்லை
கனகம் ஓடிப்போய்
கக்கூசை திறந்து பார்த்து
கருக்கலுக்குள் ஓடிப்போய்
கிணத்தடியை எட்டிபாத்து
ஓடிவந்து அலுமாரியை
ஓவென்று திறந்து பார்க்க
ஒரு உடுப்பும் அங்கில்லை
முத்தன் பெடி மோகனுக்கும்
பத்தன் மகள் இவளுக்கும்
முளைத்திருந்த காதல் பற்றி
முன்னூரில் முணுமுணுப்பு
முடிச்சுக்குள் இருந்ததுண்டு
கத்துகிறார் பத்தர் இப்ப
கனகத்தை திட்டுகிறார்
கொத்துவன் எல்லாரையும்
கொளுத்தவள் போய்விட்டாள்
சத்தியமாய் அவளெனக்கு
சரித்திரத்தில் மகளில்லை
இன்றோடு போச்சென்மானம்
இனியெல்லாம் அவமானம்
இது நடந்து வருசங்கள்
இற்றைக்கு இருபத்தைந்து
நேற்றைக்கு நெடுநாள்பின்
பத்தரை பார்த்தபோதவர்
வார்த்தைக்கு வார்த்தை
நித்தியா நித்தியாதான்
மருமகனும் தங்கமாம்
மறு பேச்சு பேசாராம்
மகள் பெற்ற பிள்ளையும்
மகா கெட்டிக்காரியாம்
தொப்பூள் கொடி பிணைப்பும்
தோள் சுமந்த அச்சுகமும்
எத்தனை ஆச்சர்யம்
எப்போதும் ஒரு உண்மை!!
Ş